"நான் 'டயட்'ல இருக்கேன் அங்கிள், இரண்டு இட்லி தான் சாப்பிடுவேன்"என்று ஏழு வயது சிறுமியிடம் இருந்து வந்த பதில் மிகவும் வியப்பளித்தது.
பிறகு ஒரு நாள் மதிய உணவு வேளையின் போது, வேறொரு நண்பரிடம் வாழைப்பழம் சாப்பிடுமாறு கேட்டதிற்கு.
"வயிறு சரியில்லை.. வாழைப்பழம் சாப்பிட்டா 200 (கி) காலரிகள் (K Calories)அதிகமாகி விடும்...அதனால வேண்டாம்" என்றார்..
"ஏன் சார், வாழைப்பழம் சாப்பிடறது செரிமாணத்திற்குக் கூட நல்லதாச்சே" என்றேன்.. "இல்லீங்க, நேத்து டின்னர் கொஞ்சம் ஹெவி! மீட், சிக்கன்னு ஒரு வெட்டு வெட்டியாச்சு... அத பேலன்ஸ் செய்யத்தான்" என்றார்..
இப்போதெல்லாம், உடலைப் பற்றியும், உட்கொள்ளும் உணவைப் பற்றியும் அதிக கவனம் வந்துள்ளது வரவேற்கத்தக்கதே. அன்றாடம், உட்கொள்ளும் உணவில் நமக்குத் தேவையான சக்தி கிடைப்பதற்காக "டயட்டீசியன்"களை அனுகுவதையும், "நான் டயட்ல இருக்கேன்" என்று நண்பர்கள் கூறுவதயும் சர்வசாதாரனமாக பார்க்க முடிகிறது.
நம் உணவு முறையைப் பார்த்தால், அதிகமாக மாவுச்சத்து சேர்த்துக் கொள்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் குறை கூற முடியாது. அதுவும், நல்ல உடற்பயிற்சி, உறக்கம் எல்லாம் இருந்தால் நம் உணவு முறையும் சிறந்ததே..
இன்னும், நமது தாத்தா பாட்டியின் உணவுப் பழக்கத்தைப் பற்றி யோசிக்கையில்
அன்றாட உணவுடன், கட்டாயமாக கூழ், இளநீர், பழைய சோற்றுத் தண்ணிர் மற்றும் இரவில் அரைவயிறுடனும் உண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு உணவு வேளைக்குப் பிறகும் கட்டாயம் இளஞ்சூட்டில் தண்ணிர் குடித்தார்கள்.
இதை நம்மில் "இன்று" எத்தனை பேர் கடைப்பிடிக்கிறோம்?
நம் முன்னோர்களுக்கு, டயட்டைப் பற்றியோ காலரியை பற்றியோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் எந்த உணவு செரிமாணத்திற்கு நல்லது என்பது தான். இதனையே திருவள்ளுவர்,
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்"
என்று கூறியுள்ளார்.
இப்போது, நாம் எந்த உணவில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நல்லதே. ஆனால் அந்த அறிவை எப்படி உபயோகிக்கிறோம்?
என் நண்பரைப் போல, முன் தினம் ஜீரண உறுப்புகள் திணறும் அளவிற்கு அசைவம் சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் உணவை குறைத்து சாப்பிடுவது சரியானதா? காலரியை மட்டும் கணக்கிட்டு, நம் கால நிலைக்குத் தகாத உணவுகளை சாப்பிடுவதை என்னவென்று சொல்ல..
இப்படி, அதிகமாக அசைவம் உட்கொள்வது நம் உடலிற்கு மட்டுமல்லாமல், பூமியின் உடல் நலத்திற்கும் தீங்கானது என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இறைச்சியை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுக்களைக் குறிப்பிடுகிறார்கள்.
"உலகெங்கும், உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறுவது இந்தியர்கள் அதிகமாக அசைவம் உண்ண ஆரம்பித்ததால் தான்" என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் கூறி பரபரப்பை கிளப்பியதைப் போல, "பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பது இந்திய மக்கள் அதிகமாக அசைவம் சாப்பிடுவதால் தான்" என்றும் ஏதாவதொரு நாட்டு அதிபர் கூற நேரிடலாம்.
"அசைவம் அதிமாக உட்கொள்ளாமல், ஒல்லியா இருப்பது பூமிக்கு நல்லது" என்று மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் நடந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
நம் முன்னோர் கடைப்பிடித்த எத்தனையோ விஷயங்களை மறந்து வரும் இந்த நேரத்தில், உணவுப் பழக்கத்தையாவது மறக்காமல் இருப்பது நல்லது. அன்றாடம் உட்கொள்ளும் உணவில் எவ்வளவு சக்தி உள்ளது, எந்த வகையான "டயட்" நல்லது என்று ஆராயும் அதே சமயம், எளிதில் செரிக்கும் உணவை உட்கொள்ளுதல் நமக்கும் நம் பூமிக்கும் நன்மை விளைவிக்கும்.
0 comments: