வீட்டு மனை வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை


நகரமயமாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புள்ள பகுதிகளை தேடி இடம் பெயர்ந்து வருவோருக்கு சொந்த வீட்டு கனவை  ஒட்டு மொத்தமாக நகரங்கள் பூர்த்தி செய்ய முடியாது. தற்போது கிராமப்புறங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக  மாற்றப்படுகின்றன. ஆனால், எந்த வீட்டு மனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு  விதிமுறைகளுக்குட்பட்டும், அனுமதி பெற்றும் கட்டப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொண்டால் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது.

பஞ்சாயத்தில் போடப்படும் எந்த ஒரு லே அவுட்டும் நகர்ப்புற, ஊரமைப்பு துறைக்கு (டி.டி.சி.பி) தெரிவிக்கப்பட்டு அதன் அனுமதி பெற்றிருக்க  வேண்டும். ஊரமைப்பு துறையின் முறையான அனுமதி பெறும் லே அவுட்களில் சாலைகளின் அகலம் குறைந்தபட்சம் 23 அடி, மனைகளின் அளவு  1500 அடி (30 அடிக்கு 50 அடி) இருக்க வேண்டும். மறுவிற்பனை என்கிற போது 1200 (30 அடிக்கு 40 அடி) சதுர அடிக்கு குறையாமல் இருக்க  வேண்டும்.

மனைப் பிரிவில் சாலையின் நீளம் 120 அடியாக இருந்தால் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடியாக இருக்க வேண்டும். சாலையின் நீளம்  120 அடி முதல் 200 அடிக்குள் இருந்தால் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 30 அடியாக இருக்க வேண்டும். சாலையின்அகலம் 200 முதல் 500  அடியாக இருக்கும்பட்சத்தில் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 40 அடியாக இருக்க வேண்டும் என்பது ஊரமைப்பு துறையின் விதிமுறை.

பஞ்சாயத்து பகுதியில் போடப்படும் மனைப் பிரிவுகளுக்கு இறுதி அனுமதி அளிக்கும் அதிகாரம் பஞ்சாயத்து தலைவருக்குதான் இருக்கிறது. ஆனால்,  ஊரமைப்பு துறையின் அனுமதியோடு போடப்பட்ட மனைப் பிரிவு என்றால் தான் அது செல்லுபடியாகும். மனைப்பிரிவில் சாலைகள், பூங்கா,  விளையாட்டு திடல், பள்ளிக் கூடம், சமுதாயக் கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். அப்போதுதான்  பஞ்சாயத்தில் போடப்படும் லே அவுட் என்றாலும் ஊரமைப்பு துறை அப்ரூவல் அளிக்கிறது.

பஞ்சாயத்து அப்ரூவல் லே அவுட்டில் சாலைகள், பூங்கா, விளையாட்டு திடல் போன்றவற்றை தானப் பத்திரமாக லே அவுட் போடும் புரமோட்டர்  தொடர்புடைய பஞ்சாயத்துக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். லே அவுட்டில் பள்ளிக் கூடம், சமுதாயக் கூடம், கடைகள் போன்றவற்றை அது  தேவைப்படுவர்களுக்கு விற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இவை என்ன தேவைக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு தான் பயன்படுத்த  வேண்டும்.

கடைகளுக்கு உரிய இடங்கள், அந்த இடத்தில் போதிய அளவுக்கு கடைகள் வந்து விட்டால் வீட்டு மனையாக மாற்றிக் கொள்ள  அனுமதிக்கப்படுகிறது. சாலையின் அகலம் குறைவு மற்றும் மனை அளவு குறைவு போன்ற காரணங்களால் கட்ட அனுமதி மறுக்கப்படுவது அதிக  எண்ணிக்கையில் இருக்கிறது. மனை அளவு 300, 400 சதுர அடி மற்றும் சாலையின் அகலம் 10 அடி அல்லது 12 அடி என்பது போல் இருந்தால்  வீடு கட்ட அனுமதி கிடைப்பது கடினம்.

இப்போது பஞ்சாயத்தாக இருக்கும் பகுதிகள், சில ஆண்டுகளில் நகராட்சி பகுதியாக மாறக்கூடும். அப்போது அதற்கான விதிமுறை இதற்கும்  அமல்படுத்தப்படும். அப்போது சாலையின் அகலம் குறைவு மற்றும் மனை அளவு குறைவு என்றால் கட்டடம் கட்ட நிச்சயம் அனுமதி கிடைக்காது.  குடியிருப்பு அல்லது முதலீடு நோக்கம் எதுவாக இருந்தாலும் சாலைகளின் குறைந்தபட்ச அகலம் 23 அடி, மனையின் குறைந்தபட்ச அளவு 1,200  சதுர அடி அல்லது 1,500 சதுர அடி வாங்கினால், கட்ட அனுமதி பிரச்னை வர வாய்ப்பில்லை.

0 comments: